சொத்துவரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!

0 1392

சொத்து வரி உயர்வையும், மின் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது, எடப்பாடி பழனிசாமி திடீரென மயக்கமடைந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது..

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் சொத்துவரி 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின்கட்டண உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொத்துவரி, மின்கட்டணம், குடிநீர்க் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தும் திமுக அரசைக் கண்டித்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள், சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்ட மேடையில் பாட்டுப்பாடித் தொண்டர்களை மகிழ்வித்தார்.

 

சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்வைக் கண்டித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டத்தைக் கண்டு ஆளுங்கட்சி நடுங்குவதாகவும், அதைத் திசைதிருப்ப அதிமுகவினர் பொய்வழக்குப் போடப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அதற்கு மாறாகச் சொத்துவரியை உயர்த்தியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆர்ப்பாட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே எடப்பாடி பழனிசாமிக்கு இலேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் இடையில் பேச்சை நிறுத்திவிட்டுச் சற்று ஓய்வெடுத்த அவர் அதன்பின் பேச்சைத் தொடர்ந்தது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments