செஸ் ஒலிம்பியாட் களைகட்டியது சென்னை

0 2683

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்-வீராங்கனைகள் வந்த வண்ணம் உள்ளனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நாளை கோலாகமாகத் தொடங்குகிறது. ஆகஸ்ட் 10ந் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிக்காக மாமல்லபுரம் அருகே தனியார் ஓட்டலில் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

போட்டியில் பங்கேற்கும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களமிறங்க உள்ளன. பிரக்ஞானந்தா, கோனேரு ஹம்பி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய-மாநில அமைச்சர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை காவல் ஆணையர் தலைமையில் 22 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 நாட்கள், சென்னையில் டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

போட்டிகள் நடைபெறும் மாமல்லபுரம் அருகில் உள்ள ஓட்டலிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்கு 29 தனியார் நட்சத்திர விடுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments