மாணவி ஸ்ரீமதியின் பேச்சாற்றல் போலி வீடியோ பரப்பிய கும்பல்..! அசல் மாணவி புகார்
கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி பேசியதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோவை வெளியிட்டு அவதூறு பரப்பிய கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்து பள்ளியை சூறையாடிய கலவரக்கும்பல் குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடந்து வருகின்றது.
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியதாக கூறி பிஸ்மில்லா கான் என்பவர் தனது முக நூலில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில் பேசுவது மாணவி ஸ்ரீமதி தானா ? என்பதை கூட உறுதிபடுத்தாமல் இவ்வளவு ஞானத்துடனும், அறிவாற்றலுடனும் பேசிய மாணவி எப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பாள் என்று ஆதங்கத்தோடு கமெண்டில் பதிவிட்டவர்கள் அதனை அதிகப்படியாக பரப்பினர் .
இந்த வீடியோவில் பேசுவது யார் ? என்றே தெரியாமல் முக நூலில் மட்டும் 66 ஆயிரம் பேர் பகிர்ந்த நிலையில் இந்த வீடியோவில் பேசிய மாணவி ஸ்ரீமதி இல்லை என்றும் அது பவதாரினி குணசேகரன் என்ற வேறு பள்ளி மாணவியின் வீடியோ என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
4 வருடங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பவதாரினி குணசேகரன் என்ற அந்த மாணவியின் பேச்சு யூடியூப்பில் பதிவெற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தவறாக பரப்பபடுவதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே தனது வீடியோவை சமூக வலை தளங்களில் உயிரிழந்த மாணவியின் வீடியோ எனக்கூறி அவதூறு பரப்புவது வேதனை அளிப்பதாக சம்பந்தப்பட மாணவி பவதாரினி வேதனையுடன் தெரிவித்துள்ளார்
இந்த தவறான வீடியோவை பதிவிட்ட மற்றும் பகிர்ந்த நபர்களின் பின்னணி குறித்து கலவர வழக்கை விசாரித்து வரும் சிறப்புக் குழு போலீசார் விசாரணையை முன்னெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments