கருணை பயணம் விடுதியில் 50 பேருக்கு மொட்டை கடத்திச் சென்றது ஏன்?

0 4727

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கருணை பயணம் விடுதியில் 50க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கருணை பயணம் கிருஸ்தவ விடுதி உள்ளது. இங்கு கடந்த 2 தினங்களாக அடையாளம் தெரியாதவர்களை வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு இரவு முழுவதும் கூச்சல், அழுகை சத்தம் கேட்பதாக அருகில் உள்ள பழங்குடி மக்கள் மூலம் தகவல் பரவியது. அந்த இடத்திற்கு சென்று பார்த்த பொதுமக்கள், அங்கு 50க்கும் மேற்பட்டோர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் 16 அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவையில் காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால் , உக்கடம், லட்சுமி மில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த யாசகர்களை பிடித்து சென்று அடைத்து வைத்தது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

கோவில் முன்பு அமர்ந்து இருந்தவர்கள், பேப்பர் படித்து கொண்டு இருந்தவர்கள் என அனைவரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் இழுத்து கொண்டு சென்றதாக சிலர் புகார் தெரிவித்தனர்.

இங்கு வந்தவுடன் கையில் இருந்த பொருட்கள், பணம், செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு தீ வைத்து எரித்து அனைவருக்கும் மொட்டை அடித்ததாகவும் தெரிவித்தனர். எதிர்த்து சத்தம் போட்ட சிலரை பைப், குச்சி கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் காந்திமதி, வாகனத்தில் கடத்தி வரப்பட்டவர்களிடம் பெயர், விலாசம் வாங்கிக் கொண்டு போலீசார் உதவியுடன் காந்திபுரம் பகுதிக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

இதற்கிடையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் போலீசார் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கருணை பயண கிறிஸ்தவ விடுதி வேனையும் கீழே தள்ளி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்களை கடத்தியது மட்டுமின்றி அவர்களது உடமைகளை பறித்து, கொடுமையாக தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கருணை பயணம் ஆசிரம நிர்வாகிகள் 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments