உயரும் குரங்கு அம்மை பாதிப்பு.. கட்டுப்படுத்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்..!

0 1921

நாட்டில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்நோய்த்தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய முடிவெடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய, மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளின் சில பகுதிகளில் பரவிய குரங்கு அம்மை தொற்று, கடந்த மே மாதம் முதல் பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் குரங்கு அம்மை பரவல் அதிகரிக்கும் நிலையில், அந்நோய் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது.

இந்தியாவில் முதன் முதலான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் இருவருக்கு அந்நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கு சுகாதார பரிசோதனையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நான்காவது நபராக டெல்லியில் ஒருவருக்கு இன்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நோய் கண்டறியப்பட்ட 34 வயது நபர் வெளிநாடுகளுக்கு செல்லாத நிலையில், லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மை தொற்று குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் குரங்கு அம்மை பரவல் தொடர்பாகவும், நோய்த் தொற்றின் மூலத்தை கண்டறியவும் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், உலகளவிலான நோய்ப் பரவல் நிலவரம், நாட்டில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments