முன்னாள் காதலனுடன் பேசிய பெண்.. கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்.!

0 4510

சென்னையில், முன்னாள் காதலனுடன் பேசியதால் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் அறந்தாங்கியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் நட்பாக பழகி வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பணியாற்றி வந்த போது மீண்டும் சந்திப்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் மாதம் 3ஆயிரம் ரூபாய் வாடகையில் குடியேறியுள்ளனர். வீட்டின் உரிமையாளரின் சந்தேகத்தை போக்கும் வகையில் அவரிடம் அக்கா தம்பி என்றும் வீட்டில் வறுமை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட சந்தோஷ், வீட்டில் ஒன்றாக வசித்து வந்த மஞ்சுளா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சந்தோஷை வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் கதவை திறந்து பார்த்தபோது இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பெண்ணின் உடலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மஞ்சுளாவை சந்தோஷே கொலை செய்து விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்த பின்னர் மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வந்ததும், சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா பெங்களூரில் பணிபுரியும் முன்னாள் காதலனிடம் நடந்தது பற்றி கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை அடுத்து பெங்களூருக்கு வருமாறு மஞ்சுளாவை முன்னாள் காதலன் அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மஞ்சுளா முன்னாள் காதலனிடம் அடிக்கடி செல்போனில் பேசுவதை அறிந்த சந்தோஷ், குடித்துவிட்டு தினமும் அவரை தாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில தினங்களாக வீட்டு செலவுக்கு சந்தோஷ் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததும், அதனால் மஞ்சுளா கடந்த 2 தினங்களாக சமைக்காமல் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

மாலையில் பணி முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ் வீட்டில் மஞ்சுளா சாப்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது சண்டை முற்றிய நிலையில் மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்த சந்தோஷ் பின்னர் அவரை துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டி தொங்க விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து சந்தோஷை கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments