போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ மனைவியை கொன்று புதைத்த கொள்ளையன்.. எஸ்.பி.ஆபீஸ் அருகில் கொடூரம்.!

0 5364
போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ மனைவியை கொன்று புதைத்த கொள்ளையன்.. எஸ்.பி.ஆபீஸ் அருகில் கொடூரம்.!

கடலூர் எஸ்.பி. அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மனைவியை கொடூரக் கொலை செய்து நகைகளைப் பறித்துச்சென்ற போதை இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம். இவரது மனைவி மலர்க்கொடி இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் சிவகுரு. போலீஸ்காரராக உள்ளார். இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடந்த 21-ந்தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார்.

சம்பவத்தன்று மதியம் 2 மணி அளவில் ஆனைக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி, வெளியே சென்ற மலர்க்கொடி, அங்குள்ள பழைய போலீஸ் குடியிருப்பில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

முகம் சிதைக்கப்பட்டும், காது அறுக்கப்பட்டு நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. தலை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில், இளைஞர் ஒருவர் ரத்தக்கறையுடன் அந்த வழியாக சென்றது தெரிய வந்தது. விசாரணையில், அந்த வாலிபர் புதுக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர் சத்யம் என்று 34 வயது இளைஞர் என்பதை கண்டறிந்து அவரை பிடித்து விசாரித்தனர்.

சம்பவத்தன்று பயன்பாடு இல்லாமல் இருந்த பழைய போலீஸ் குடியிருப்பில் நின்று கொண்டிருந்த சத்யம், கழுத்தில் தங்க சங்கிலி, காதில் கம்மல், மூக்குத்தி அணிந்திருந்த மலர்கொடி தனியாக வருவதை நோட்டமிட்டுள்ளான்.

அந்த நகைக்கு ஆசைப்பட்டு, அவரை பின் தொடர்ந்து சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளான். அவர் சத்தம் போட்டதால், வாயை பொத்தி, ஓங்கி முகத்தில் குத்தி கீழே தள்ளி நிலைகுலைய வைத்துள்ளான்.

கீழே விழுந்தாலும் அவர் தனது கழுத்தில் கிடந்த செயினையும், சேலையையும் இறுக்கி பிடித்து கொண்டு போராடி உள்ளார்.

இருப்பினும் விடாமல் கழுத்தில் கிடந்த செயினை அறுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்ட கொள்ளையன், காதில் அணிந்திருந்த கம்மல், தோடையும் காதை அறுத்து பறித்துக்கொண்டதோடு, அவரை உயிரோடு விட்டால் நம்மை காட்டி கொடுத்து விடுவார் என்று, அவரை தரையில் அடித்தும், முகத்தை புதைத்தும் அவரது தலை மீது கல்லை தூக்கிப்போட்டும் கொடூரமாக கொலை செய்ததை சத்யம் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

திருடிய நகைகளுடன் புதுச்சேரி கும்தாமேடு சாராய கடைக்கு சென்று சாராயம் குடித்து விட்டு விழுந்து கிடந்த போது இவனது சட்டை பையில் இருந்து தாலி சங்கிலியை யாரோ திருடிச்சென்று விட்டதாகவும், மீதியுள்ள நகையை விற்று குடிக்கலாம் என்று வந்தபோது, போலீசாரிடம் சிக்கிக்கொண்டான் சத்யம் . கொலையாளி மொத்தம் 13 சவரன் நகைகளை பறித்துச்சென்ற நிலையில் ஒரு சவரன் நகையை மட்டும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் சத்யத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

வயதான மூதாட்டிகள் தனியாக வெளியிடங்களுக்கு செல்லும் போது பிறரது கண்களை உறுத்தும் வகையிலான தங்க நகைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் மது எவ்வளவு பெரிய சமூகத் தீமை என்பதற்கு இந்த கொடூர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments