பிடித்து கொடுத்த திருடனை விடுவித்த போலீசாரால் வீடு வீடாக தொடரும் திருட்டு..! நடவடிக்கை எடுப்பது யார் ?

0 6686

சென்னை ராயப்பேட்டையில் தேய்த்த துணிகளை வீடுகளுக்கு சென்று கொடுப்பது போல திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசில் பிடித்து கொடுத்த நிலையில், போலீசார் கைது செய்யாமல் விடுவித்த அன்றே மீண்டும் அவன் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் பொதுமக்கள் உதவியோடு போலீசாரால் வைக்கப்பட்ட பல சிசிடிவி காமிராக்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு செயல் இழந்து காணப்படுகின்றன.

இதனை தங்களுக்கு சாதகமாக்கி இருசக்கரவாகன திருட்டு அரங்கேறி வந்த நிலையில் அந்த பகுதியில் துணி தேய்க்கும் தொழில் செய்து வருபவரின் மகன் வீடு தேடிச்சென்று தேய்த்த துணிகளை கொடுப்பது போல நோட்டமிட்டு வீட்டில் இருந்து செல்போன், பணப்பை, சைக்கிள் உள்ளிட்டவற்றை தூக்கிச் சென்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளையும், அங்கு கிடந்த பெரிய இரும்பு குழாய்களையும் தூக்கி சுற்றுசுவரை தாண்டி வீசிய போது ஒருவர் தப்பி ஓட, ஒருவன் கையும் களவாக சிக்கிக் கொண்டான்.

அவனிடம் விசாரித்த போது உடன் வந்தவனை அடையாளம் காட்டினான், தகவல் அறிந்து வந்த போலீசார் மூலம், அருகில் ஒரு கடையில் பதுங்கி இருந்த ‘அயர்ன்’கார்த்திக் என்ற அந்த இளைஞரை பிடித்துச்சென்றனர்

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணா என்பவர் எழுத்துப்பூர்வமாக ராயப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்தார். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நிலையில், அந்த இருவர் மீதும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்து அனுப்பிவிட்டதாக கூறப்படுகின்றது.

வெளியில் வந்த அடுத்த சில மணி நேரங்களில் பாலாஜி நகரில் உள்ள பல்மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளான். அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் செல்போன் மற்றும் ரொக்கபணத்தை அவன் களவாடிச்சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன

இது குறித்தும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மட்டுமல்ல, சென்னையில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகின்றது.

தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுகின்றதா ? என்பதை அவ்வப்போது கவனித்தால் குற்ற வழக்குகளில் போலீசார் எளிதாக துப்பு துலக்கவும், திருடர்களை பிடிக்கவும் உதவியாக இருக்கும் அதே நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோருக்கும் கேமராவை பார்த்தால் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சம் ஏற்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments