கணியாமூர் வழக்கு-மாணவி உடலைப் பெறப் பெற்றோர் ஒப்புதல்

0 4434

கணியாமூர் பள்ளி மாணவி உடற்கூறாய்வு அறிக்கைகளைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வல்லுநர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்ளவும், மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்கவும் பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கணியாமூர் மாணவியின் உடலைப் பெற்றோர் வாங்க மறுப்பதாகக் கூறி நீதிபதி சதீஷ்குமார் முன் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் வல்லுநர் செல்வக்குமார் ஆஜராகி, இரண்டாவது முறை உடற்கூறாய்வில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் இரக்கம் கொள்வதாகத் தெரிவித்த நீதிபதி, உடலைப் பெற்றுக்கொள்ளத் தாமதம் ஏன்? என வினவினார்.

ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை ஏற்படுத்தாமல், அமைதியான தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியதுடன், மகளின் உடலை வைத்துப் பெற்றோர் பந்தயம் கட்டக்கூடாது எனத் தெரிவித்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தபோது, அதுகுறித்துத் தமிழக முதல்வர் ஆலோசித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுவதாகவும், அது மனுதாரருக்குத் தெரியாமலேயே நடந்துள்ளதாகவும் கூறிய நீதிபதி, மாணவி மரணம் தொடர்பாகச் சமூக ஊடகங்கள் முழுவதும் பொய்ச் செய்தியைப் பரப்பி உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர் ஆகியோர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அறிக்கைகளையும் வீடியோ பதிவுகளையும் ஜிப்மர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மாணவியின் உடலை நாளைக் காலை பெற்றுக்கொள்ளவும், மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்கவும் பெற்றோருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து மகளின் உடலை நாளைக் காலை பெற்றுக்கொள்ளவும், மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்கவும் பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.

இதனிடையே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தபடி மாணவியின் தாயார் நாளை காலை உடலை வாங்குவார் என நம்புவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் சரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.

கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், பள்ளியை மீண்டும் திறக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், வன்முறையில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு முகாம்கள் அமைத்து அவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments