அதிமுக அலுவலகத்திற்கு சீல் வழக்கு-இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

0 3135

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் சாவியை ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்துள்ளது. 

அதிமுக தலைமை அலுவலகம் முன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடந்த 11 ஆம் தேதி ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுக அலவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். அந்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியாக தொடர்ந்து வழக்கில் நீதிபதி சதிஷ்குமார் இன்று தீர்ப்பளித்தார்.

பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தது, வன்முறையை கட்டவிழ்த்தது போன்றவற்றை செய்திருக்க கூடாது என்றும், எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது என்றும் நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

பொதுக்குழு கூட்டத்தில் பெருமான்மையினரின் முடிவை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, பொதுக்குழு முடிவே மேலோங்கி நிற்கும் என்றும், ஒ.பி.எஸ். நீக்கப்பட்டுள்ளதால் கட்சி அலுவலக கட்டடத்தின் மீதான சுவாதீன உரிமையை கோர முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கட்சியில் இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை என்பது சொத்தில் சுவாதீனம் சம்பந்தப்பட்டதா, இல்லையா என்பது வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது, கட்சி அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும்
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இருந்ததும் தெளிவாகிறது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை தாக்கல் செய்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஒ.பி.எஸ். கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்து ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் வழக்குகளை நீதிபதி முடித்துவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments