போலீசில் கருப்பு ஆடு பொறுக்கியாக இருந்த காவலர் பணி நீக்கம்..! அதிரடி காட்டிய தூத்துக்குடி எஸ்.பி..!

0 16905
போலீசில் கருப்பு ஆடு பொறுக்கியாக இருந்த காவலர் பணி நீக்கம்..! அதிரடி காட்டிய தூத்துக்குடி எஸ்.பி..!

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் ஒருவரைப் பணி நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து சாமர்த்தியமாக தப்பியவருக்கு, துறை ரீதியான விசாரணையில் வழங்கப்பட்ட தண்டணை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை நினைவுபடுத்தும் வகையிலான நிஜ சம்பவத்தில் வேலையை பறிகொடுத்த காவலர் சசிக்குமார் இவர் தான்..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த சசிகுமார், கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ந்தேதி திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு அயல்பணிக்காக சென்றுள்ளார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் அங்குள்ள ஒரு கோவிலுக்கு காக்கி சீருடையில் சென்ற சசிகுமார், அங்கு தனது நண்பருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார்.

அதில் சிறுமியின் ஆண் நண்பரை விரட்டிவிட்டு சிறுமியை மட்டும் விசாரிக்க வேண்டும் என்று தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, தனது செல்போனில் ஆபாச படமாகவும் எடுத்து வைத்துக் கொண்டு அந்த சிறுமியை மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து காவலர் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சசிகுமார் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அண்மையில் தண்டனை ஏதுமின்றி காவலர் சசிக்குமார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சசிக்குமார் மீதான துறை ரீதியான விசாரணை ஆவணம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கைக்கு வந்தது.

அத்தனை ஆதாரங்களும் சரியாக இருந்த நிலையில் போக்சோ வழக்கில் காவலர் சசிகுமார் எப்படி தண்டனையில் இருந்து தப்பினார் என்று விசாரித்த போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து வழக்கு விசாரணைக்கு அந்த சிறுமி ஆஜரானால் எப்படி எல்லாம் கேள்வி கேட்பார்கள்... நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தால் பெண்ணின் வாழ்க்கையே போய்விடும்... என்றெல்லாம் சிறுமியின் பெற்றோரை அச்சுறுத்தி புகாரை வாபஸ் பெற வைத்து தண்டனையில் இருந்து தப்பியது தெரியவந்தது.

இந்த நிலையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக்கோப்பை சீர்குலைத்து பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சசிகுமார் குற்ற செயல் புரிந்துள்ளது துறை ரீதியான விசாரணையில் நிரூபணமானதால், காவலர் சசிகுமாரை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆதாரங்கள் பல இருந்தும் நீதிமன்ற தண்டனையில், சாதுர்யமாக தப்பிய காவலர் சசிகுமாரைப் போன்றவர்கள் காவல் பணியில் தொடர்வது சரியாக இருக்காது என்று கருதியதால் அவரை பணி நீக்கம் செய்ததாக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments