செல்பிக்கு ஆசைப்பட்ட அரை டவுசர் அழகர்களை சுத்துபோட்ட வெள்ளம்..! இதெல்லாம் தேவையா பாய்ஸ் ?

0 3131

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற மூன்று கல்லூரி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை சனிக்கிழமை நிரம்பியது. இதனையடுத்து மாலை ஒரு லட்சத்து 13ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 16 கண் மதகு வழியே தண்ணீர் கரை புரண்டு ஓடியது.

தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டதால் ஆற்றுப்பகுதி முழுவதும் வெள்ள காடாக காட்சியளித்தது. தண்ணீர் அதிகம் செல்வதை 16 கண் மதகு அருகே உள்ள பாலத்தில் பொதுமக்கள் திரளாக நின்று வேடிக்கை பார்த்து சென்றனர் .

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரவீன், பிரபு, தினேஷ் ஆகிய மூவரும் மேட்டூர் அணைக்கு சென்று வேடிக்கை பார்த்தனர். அப்போது மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே ஆற்றின் நடுவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று செல்பி எடுத்து கொண்டிருந்தனர்

வெள்ள நீரின் அளவு உயர்ந்து கொண்டேயிருந்ததால் மூன்று வாலிபர்களும் நின்ற பாறை பகுதியில் மெய்மறந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்ததால் சிறிது நேரத்தில் திடீரென வெள்ளம் சூழ்ந்து கொண்டது.  இதனால் அதிர்ச்சி அடைந்த மூன்று பேரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டு உயிருக்கு போராடினர்.

நேரம் செல்ல அவர்கள் நின்ற பாறையை வெள்ளம் நீர் மூழ்கடித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மற்றும் டயர்களை கொண்டு மூன்று வாலிபர்களையும் மீட்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களை வெள்ளம் இழுத்துச்சென்றது அவர்கள் உடலில் கயிறு கட்டப்பட்டிருந்ததால் அவர்களை இழுத்து கரைக்கு கொண்டுவந்தனர். இதன் பின்னர் ஒரு வழியாக கயிற்றுடன் சென்று அந்த 3 மாணவர்களையும் ஒருவர் பின் ஒருவராக இடுப்பில் கயிற்றை கட்டி விரைவாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்

மீட்கப்பட்ட மூன்று பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். எதற்காக ஆற்றின் நடுப்பகுதிக்குள் உள்ள பாறைக்கு சென்றார்களோ அந்த செல்பி புகைப்படத்தை எடுத்த செல்போன் தண்ணீரில் நனைந்து வீணானது.

முன்னதாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர பகுதியில் வசிப்பவர்களும், பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு சென்று செல்பி எடுக்கக் கூடாது, ஆற்றுக்கு அருகில் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவங்கள் மேட்டூர் அணை பகுதியில் மீண்டும் நடந்து விடாமல் இருக்க கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments