காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் சீறிப் பாய்கிறது. ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லைக்கு தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணை நிரம்பிவிட்ட நிலையில், ஒரு லட்சத்து 23 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் குளிக்கவோ ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சில வீடுகளுக்குள் ஆற்றுநீர் புகுந்ததால் இந்திரா நகர், அண்ணாநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நகராட்சி துவக்கப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Comments