வெட்டுக்காயத்தில் ஸ்டேபிளர் பின் அடித்த விஞ்ஞான செவிலியர்..! ரணமாகி அழுகும் விபரீதம்..!

0 3908
வெட்டுக்காயத்தில் ஸ்டேபிளர் பின் அடித்த விஞ்ஞான செவிலியர்..! ரணமாகி அழுகும் விபரீதம்..!

ஏற்காடு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு கையில் ஏற்பட்ட வெட்டுகாயத்தில் தையல் போடுவதற்க்கு பதிலாக ஸ்டாப்ளர் பின் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி ஒருவர் கைவிரல்களில் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் குமாரசெல்வம் பணியில் இல்லாத நிலையில், அங்கிருந்த செவிலியர் ஒருவர், விரலில் வெட்டுபட்ட இடத்தை தையல் போட்டு இணைப்பதற்கு பதிலாக ஸ்டாப்ளேர் பின் அடித்து விட்டதோடு மறுநாள் வந்து தையல் போட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த நோயாளி வெள்ளிக்கிழமை காலை சென்று கேட்டுள்ளார்.

அங்கிருந்த மருத்துவர் குமாரசெல்வம் , நான் அப்போது பணியில் இல்லை எனவும், அது செவிலியர் பார்த்த மருத்துவம் எனவும் கூறியுள்ளனர். மேலும் இப்பொழுது அந்த ஸ்டாப்ளேர் பின்களை மாற்ற முடியாது என கூறி மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனால் அவரது விரல்கள் மேலும் ரணமாகி கடுமையான வலியுடன் அவதியுற்று வருவதாக இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இது தொடர்பாக மூத்த மருத்துவர் ஒருவர் கூறும் போது தையல் பழைய முறை என்றும் புதிய முறையில் வெட்டுபட்ட இடங்களை இணைக்க ஸ்கின் ஸ்டேபிளர் பின் அடிக்கும் முறை பயன்படுத்தப் படுவதாகவும், ஆனால் இந்த விரல்களில் அடித்திருப்பது பேப்பர்களை இணைக்க பயன்படும் ஸ்டேபிளர் பின் என்றும் இது தவறான சிகிச்சை என்றும் விரல்கள் ரணமாகி அழுகும் நிலை ஏற்படுவதற்குள் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments