தலைக்கு தில்ல பாத்தியா..! ஒரே ஊரில் அடுத்தடுத்து 7 பெண்களுடன் டும் டும்..!
ஒரே ஊரை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை வெவ்வேறு பெயர்களைச் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த களவாணி மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜில்லா கேடிகளுக்கெல்லாம் டாடி போல ஆந்திரா மற்றும் தெலங்கனாவை சேர்ந்த 11 பெண்களை குறுகிய காலத்தில் திருமணம் செய்து நகை பணம் பறித்த குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை சிவ சங்கர் பாபு இவர் தான்..!
குண்டூரைச் சேர்ந்த சிவ சங்கர் பாபு தன்னை சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனி இணையதளங்களில் பதிந்து வைத்திருந்தார்.
குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார்.
அவர் கூறுவதை உண்மை என நம்பிய பெண்கள் தங்கள் செகண்ட் இன்னிங்ஸ்சாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் வேலை விஷயமாக வெளியூர் சென்று வருவதாக கூறி விட்டு, அவர்களிடமிருந்த விலை உயர்ந்த நகை மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுவார் என்று களவாணி மாப்பிள்ளையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதே போல் பல பொய்களை சொல்லி சிவசங்கர் பாபு இது வரை 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அவர்களில் 7 பேர் கொண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த கிராமத்தில் பக்கத்து தெருவில் வசிக்கின்ற பெண்களை கூட கச்சிதமாக தனது மோசடி வலையில் வீழ்த்தி கெட்டிமேளம் கொட்டி நகை பணத்துடன் தப்பி உள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.
வாரம் ஒரு பெண், மாதம் ஒரு மணவறை என்று மாப்பிள்ளை சோக்கில் சுற்றி வந்த சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் திருமண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும், பலரை திருமணம் செய்து சிவ சங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் சோகம் என்னவென்றால், சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது..!
Comments