இலங்கையில் ஜூலை 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு - சபாநாயகர் அறிவிப்பு

0 610
இலங்கையில் ஜூலை 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு - சபாநாயகர் அறிவிப்பு

இலங்கையில் புதிய அதிபர் 20ந் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். கோத்தபய வெளிநாடு தப்பிச் சென்றாரா அல்லது உள்நாட்டில் பதுங்கி உள்ளாரா என குழப்பம் நீடித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைகளுக்குப் பிறகு கோத்தபய ராஜபக்சேவை காணவில்லை என்றும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

கடற்படை கப்பலான கஜாபஹூவை நோக்கி அதிபரின் உடைமைகள் கொண்டு செல்லப்பட்டதால் கடல்வழியாக குடும்பத்தினருடன் அவர் தப்பிச் சென்று விட்டதாகத் தகவல் வெளியாகின.

இந்நிலையில், கோத்தபய அண்டை நாட்டில் இருப்பதாகவும் புதன்கிழமை கொழும்பு திரும்பி அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் கோத்தபய இலங்கையில் தான் இருக்கிறார் என்று அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூழலால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்ததைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பலர் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து விட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அரசியல் தலைமையில் வெற்றிடம் நிலவுகிறது. அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் யாரை அமர்த்துவது என்பது குறித்து எதிர்க்கட்சியினரிடம் தெளிவில்லாத நிலை நீடித்து வருகிறது.

பிரதான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சஜித் பிரேமதாசா இடைக்கால அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில், சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வரும் 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கும் என்றும், 20 ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments