சுற்றுலாத் தலம்போல மாறிய இலங்கை அதிபர் மாளிகை.!

0 2018

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடியுள்ள நிலையில், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலம்போல மாளிகையின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டுச் செல்வதுடன் அமர்ந்து உணவருந்திச் செல்கின்றனர். 

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் மக்களின் சினத்துக்கு ஆளான கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதையொட்டிய மைதானத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் முற்றிலும் வெளியேறிவிட்டனர். இதனால் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் அதிபர் மாளிகை உள்ளது. இந்நிலையில் கொழும்பு நகர மக்கள் குடும்பத்துடன் வந்து சுற்றுலாத் தலம்போல் அதிபர் மாளிகையை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து நுழைந்தபோதும் அதிபர் மாளிகையில் உள்ள படங்கள், ஓவியங்கள், மீன்தொட்டிகள் உள்ளிட்ட எவற்றையும் உடைக்கவோ, நொறுக்கவோ, தீவைக்கவோ இல்லை என்பது மக்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. இவற்றையும் பொதுமக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

அதிபர் மாளிகைத் தாழ்வாரங்களில் உள்ள ஓடுகள், சன்னல் கண்ணாடிகள், கார்களையும் மக்கள் உடைக்கவில்லை. அவற்றையும் ஆர்வத்துடனும் வியப்புடனும் பொதுமக்கள் பொறுமையாகப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

அதிபர் மாளிகையின் பல்வேறு அறைகளில் கட்டில், படுக்கை, தொலைக்காட்சிப் பெட்டிகள், நிலைக்கண்ணாடிகளும் அப்படியே உள்ளன. பெரிய அரங்குகளில் உள்ள இருக்கைகள், நாற்காலிகள் மக்கள் அமர்ந்து செல்கின்றனர். பஞ்சு மெத்தை போன்றிருக்கும் சோபாக்களில் சிறார்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர்.

குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த உணவை அதிபர் மாளிகைத் தோட்டத்தில் அமர்ந்து உண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

மாளிகையின் பல்வேறு பகுதிகளிலும் பல கோணங்களில் நின்று படமெடுத்துக் கொள்கின்றனர். நேற்றைய புரட்சியின்போது, ஆர்வ மிகுதியால், இளைஞர்கள் துள்ளிக் குதித்துக் குளித்த நீச்சல் குளம், இப்போது, ஆரவாரமின்றி, அமைதியாகக் காட்சியளிக்கிறது. அதன் முன்பு நின்று பெண்கள் படம்பிடித்துச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments