ஓ.பி.எஸ் வழக்கில் காரசார விவாதம் : விரிவாகப் பதிலளிக்க இபிஎஸ்-க்கு உத்தரவு..!

0 1142
ஓ.பி.எஸ் வழக்கில் காரசார விவாதம் : விரிவாகப் பதிலளிக்க இபிஎஸ்-க்கு உத்தரவு..!

அதிமுக பொதுக்குழு கூடுவதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தொடுத்த வழக்கில் இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் நடைபெற்றது. விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகலுக்குத் தள்ளி வைத்தார்.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழு கூடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதால், தான் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதி வினவினார்.

 

ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழு கூட்டுவது கட்சி விதிக்கு எதிரானது என்றும், நோட்டீசில் எவர் கையெழுத்தும் இல்லை என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

பொதுக்குழு தொடர்பாக வேறு என்ன பிரச்சினை உள்ளது? என ஓ.பி.எஸ். தரப்பிடம் நீதிபதி வினவினார். 

 

அதிமுக விதிகளின்படி பொதுக்குழுவைக் கூட்டவில்லை என்றும், அதனால் பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் ஓ.பி.எஸ் வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப் போவதாக ஜூன் 23ஆம் நாளே அறிவிக்கப்பட்டு, அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர் தெரிவித்தார்.

பொதுக்குழுவைக் கூட்டுவதில் வேறு என்னதான் பிரச்சனை? ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதி வினவினார்.

ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாவிட்டால் கட்சி செயல்படாதா என வினவிய நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் யாருக்கு? என வினவினார்.

 

இடைக்காலப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யப் பொதுக்குழு கூட்டப்படுவதாகக் கூறி ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழுத் தீர்மானங்களை ஓபிஎஸ் வழக்கறிஞர் படித்தார்.

 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ள நிலையில் அதைப் புறந்தள்ளி உள்ளதாகத் தெரிவித்தார்.

தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறியே உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்குத் தொடுத்துள்ளதையும் ஓபிஎஸ் வழக்கறிஞர் தெரிவித்தார்.

பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் அதைத் தடுக்கும் நோக்கில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பொதுக்குழு சிறப்புப் பொதுக்குழு என்றும், கடந்த பொதுக்குழுவின் தொடர்ச்சி அல்ல என்றும் தெரிவித்த இபிஎஸ் வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலின்போது, தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் அழைப்பு விடுத்ததையும் சுட்டிக் காட்டினார்.

 

பொதுக்குழுவுக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்புதான் தடை கேட்பதாகவும், அதனால் ஓபிஎஸ்சின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்ற வினா எழுவதாகவும் இபிஎஸ் வழக்கறிஞர் தெரிவித்தார். 

 

இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் தற்போதைய நிலை என்ன? பொதுக்குழுவைக் கூட்டத் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்கிற வினாக்களுக்கு விரிவான பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments