இசை ராஜாவுக்கு ராஜ்யசபாவில் நியமன எம்பி பதவி..!
திரை உலகில் 1400 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனைப்படைத்ததோடு, இரண்டு பத்ம விருதுகளையும் பெற்றுள்ள இசைஞானி இளையராஜாவின் கலை இலக்கிய திறமைக்கு கவுரவம் அளிக்கும் வகையில் மாநிலங்களவை நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஞானதேசிகன் என்கிற இளைராஜாவின் ஆர்மோனியத்தில் இருந்து இசையாக பறக்க தொடங்கிய அன்னக்கிளியின் ஓசை 45 ஆண்டுகளை கடந்தும் இசை ரசிகர்களை தாலாட்டி வருகிறது..!
தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ள இளையராஜா 7000 பாடல்களை கருவாக்கி உருவாக்கியதால் கலைஞர் கருணாநிதியால் இசைஞானி என்று பட்டம் சூட்டி பாராட்ட பெற்றவர்..!
சினிமா பின்னணி இசையில் உலக இசை, கிளாசிக்கல் இசை, நாட்டுப்புற இசை, ஒரட்டரியோ இசை, ஜாஸ் இசை, ராக் இசை என கலைத்துறையில் சாதனை சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா பத்மபூசன், பத்மவிபூசன் என இரு பத்ம விருதுகளையும், தான் இசை அமைத்த படங்களுக்காக 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் 45 ஆண்டுகால கலை மற்றும் இலக்கிய சேவையை போற்றும் விதமாக மத்திய அரசு அவருக்கு மாநிலங்களவை நியமன எம்.பி பதவி வழங்கி கவுரவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Comments