தன்னுடன் பேச மறுத்த காதலியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற காதலன் கைது

வேலூர் அருகே, தன்னுடன் பேச மறுத்த காதலியை, கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
குப்பத்தா மோட்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார், தனியார் கல்லூரியில் கண் தொழில்நுட்பம் படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டாருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் வழக்கம் போல் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில், மாணவி சதீஷ்குமாருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், காலை மாணவி கல்லூரி செல்ல திருவலம் மார்க்கெட்டில் காத்திருந்த போது, அங்கு வந்து தகராறில் ஈடுபட்டதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், சதீஷ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Comments