அதிமுக பொதுக்குழு கூட்டத் தடை இல்லை..!

0 1241

அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்குத் தடையில்லை எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதியே பொதுக்குழு பற்றி இறுதி முடிவெடுப்பார் என்றும் அறிவித்துள்ளது. 

அதிமுக அவைத் தலைவராகத் தமிழ்மகன் உசேனைத் தேர்வு செய்ததையும், ஜூலை 11ஆம் நாள் மீண்டும் பொதுக்குழு கூட்டுவதையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

முன்னதாக ஜூன் 23இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில், ஏற்கெனவே உள்ள தீர்மானங்களைத் தான் நிறைவேற்ற வேண்டும் எனவும், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் செய்த மேல்முறையீடு இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தைத் தாங்கள் எடுத்துக்கொள்ள முடியாது என்றும், உட்கட்சி விவகாரத்தில் ஓர் எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது எனக் கூறியதுடன், கட்சி விவகாரங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தது ஏன்? என வினவினர். கட்சிப் பிரச்சனைகளைப் பொதுக்குழுவில் விவாதிக்கும்படியும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

ஜூலை 11ஆம் நாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதியே அது தொடர்பாக இறுதி முடிவெடுப்பார் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதுடன், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments