ஜிம்மில் பாடி பில்டர் சுருண்டு விழுந்து பலி விஷ போதை விபரீதம்..!
நாகர்கோவிலில் ஜிம் நடத்திவந்த பாடி பில்டர் ஒருவர் உடற்பயிற்சிக் கூடத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அரேங்கேறி உள்ளது. உயிருக்கு விஷமான போதைப் பழக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் 42 வயதான ஜெயக்குமார். 2015 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஜெயக்குமார் அந்தப்பகுதியில் ரோகித் என்ற பெயரில் ஜிம் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று காலையில் மாஸ்டர் ஜெயக்குமார், வழக்கம் போல தனது உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றுள்ளார். அங்கு சில இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மாஸ்டர் ஜெயக்குமார் திடீரென்று மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகின்றது.
அவர் மீது மது வாடை வீசியதால் மது அருந்திய நிலையில் உடற்பயிற்சி செய்ததால் மயங்கி விழுந்திருக்கலாம என்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் நடத்திய விசாரணையில் விஷபோதையால் அவர் உயிரிழந்த பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
பாடி பில்டராக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயக்குமார் கடந்த சில மாதங்களாக மதுவுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ந்தேதி மித மிஞ்சிய போதையில் வீட்டுக்கு சென்ற ஜெயக்குமாரை அவரது மனைவி கடுமையாக கண்டித்து உள்ளார்.
ஒரு காலத்தில் பாடி பில்டராக இருந்து விட்டு குடியை மறக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் விஷம் கலந்த மதுவை குடித்து விட்டு கடைசியாக உடற்பயிற்சி செய்து ஜெயக்குமார் உயிரை மாய்த்துக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஜெயகுமாரின் மனைவி மனைவி தங்கபாய் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கட்டுக்கோப்பான உடல் இருந்தாலும், உயிரை மெல்லக்கொல்லும் விஷமான மது போதைக்கு அடிமையானால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்..!
Comments