இரட்டை எஞ்சின் பொருத்திய வளர்ச்சிக்கு பாஜகவுக்கு வாக்களிக்க பிரதமர் வேண்டுகோள்.!

இந்தியாவைப் பல ஆண்டுகளாக ஆண்ட தேசியக் கட்சி வாரிசு அரசியலால் தனது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என்றும் மக்கள் வாரிசு அரசியலை வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தெலுங்கானா மாநிலம் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட வளர்ச்சிக்கு பாஜக பக்கம் வர விரும்புவதாக தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் வளர்ச்சியின் சுபிட்சம் உருவாகும் என்று உறுதியளித்தார். கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக மோடி கூறினார்.
மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கவும் வளர்ச்சியின் பலன்களை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லவும் ஓயாமல் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியின் பெயரைக் கூறாமலே அக்கட்சி அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக விமர்சித்தார்.
அக்கட்சித் தலைவர்கள் ஊழலிலும் வாரிசு அரசியலிலும் திளைத்ததாக அவர் சாடினார். மக்கள் ஊழலையும் வாரிசு அரசியலையும் வெறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அக்கட்சியின் வீழ்ச்சியைப் பார்த்து பாஜகவினர் கேலி செய்ய வேண்டாம் என்றும் அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
முஸ்லீம் மக்கள் மற்றும் ஏழை மக்களிடம் சென்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டுங்கள் என்றும் அவர் பாஜக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்.ஹைதராபாதின் பெயர் பாக்யநகர் என்று இருந்தால் அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கோடிட்டு காட்டியுள்ளார்.
Comments