சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் செயல்திறன் உயர்த்தும் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

உள்ளூர்ப் பொருளுற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 200 கோடி ரூபாய் வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் விடுவதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் இந்திய தொழில்முனைவோர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்தும் மற்றும் விரைவுபடுத்தும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
முதன்முறை ஏற்றுமதியாளர்களுக்கான திட்டத்தைத் தொடக்கி வைத்ததுடன், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் புதிய சிறப்புக் கூறுகளையும் வெளியிட்டார்.
பொருளுற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்ட சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், நிறுவனங்களின் மேம்பாட்டுக்குச் சிறப்பாகப் பங்காற்றிய மாநிலங்கள், மாவட்டங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு விருதுகளை வழங்கிப் பிரதமர் பாராட்டினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அளவில் தனித்துவமான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
18 ஆயிரம் நிறுவனங்களுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் ஊக்கத் தொகையாக வங்கிக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளுற்பத்தியில் 30 விழுக்காடு சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் கிடைப்பதாகவும், அரசின் இ சந்தைத் தளத்தில் நிறுவனங்களைப் பதிவு செய்தால் அவற்றின் தயாரிப்புகளை அரசு கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நாடுகளிடையே உள்ள செயல்பாட்டின் தூண்களாக வணிகம், தொழில்நுட்பம், சுற்றுலா ஆகியன உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments