மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

0 3027
மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

79 வயது முதியவரின் நோய் தீர்க்க பூஜை செய்வதாகக் கூறி, மாமியார் மற்றும் மருமகளிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணத்தையும், 37 சவரன் நகைகளையும் ஏமாற்றிய பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். 'சொல்வதெல்லாம் உண்மை' என்று மாந்த்ரீகத்தை நம்பி வீதிக்கு வந்த பெண்ணின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

மாமியார் மற்றும் மருமகளிடம் நோய்களை குணப்படுத்த பரிகார பூஜை செய்வதாகப் பேசி மயக்கி மொத்தமாக நகை பணத்தை ஆட்டையை போட்டுச்சென்றதாக போலீசில் சிக்கி இருக்கும் சவடால் சத்தியவதி இவர் தான்..!

புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் முருகன் இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். முருகனின் தந்தை துரைராஜன் தாய் உதயகுமாரி ஆகியோரும் உடன் இருந்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு முருகனின் வீட்டிற்கு சத்தியவதி என்ற 36 வயது பெண் வாடகைக்கு குடி வந்தார். முருகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படுவதை பார்த்த சத்தியவதி, லட்சுமியிடம் அமர்ந்து பேசி பரிகார பூஜைகள் மூலம் அதனை சரி செய்து விடலாம் என்று மூளை சலவை செய்துள்ளார். இதனை நம்பி கணவனுக்கு தெரியாமல் ஏராளமாக பணம் கொடுத்து பூஜைகளை செய்து வந்துள்ளார்.

இதற்க்கிடையே முருகனுக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரிந்து அதற்கு உண்டான மருந்து சாப்பிட ஆரம்பித்ததும் வயிற்றுவலி கட்டுக்குள் வந்துள்ளது. இதனை தனது பூஜையால் சரிசெய்ததாக கூறி நம்பவைத்துள்ளார் சத்தியவதி. இதை உண்மை என்று நம்பிய லட்சுமியின் மாமியார் உதயகுமாரியோ, 79 வயதான தனது கணவர் துரைராஜனையும் நோயின்றி தெம்பாக நடக்க வைக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.

அவரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு பூஜைகளை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சத்தியவதி தன்னை ஒரு மாந்தீரிக்க குருவாக காட்டிக் கொண்டு மிரட்டி பயமுறுத்தி பணம் பறிக்க தொடங்கி உள்ளார்.

தன்னை பற்றி வெளியில் சொன்னால் ரத்தம் கக்கி செத்துப் போவீர்கள் , குழந்தைகள் ஒவ்வொன்றாக செத்து விழும் என்றெல்லாம் அடிக்கடி மிரட்டி வந்த சத்தியவதி ,கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த 37 சவரன் நகைகளை நைசாக பேசி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. இரு குழந்தைகளையும் அடித்தும் சூடுவைத்தும் துன்புறுத்திய போதும் தங்கள் குடும்பமே மூட நம்பிக்கையின் பிடியில் சிக்கி கிடப்பதை உணராமல் இருந்துள்ளனர்

இந்த நிலையில் நோய் தீர ஒரு வருடமாக பரிகார பூஜை செய்யப்பட்ட துரைராஜன் அண்மையில் உடல் நலக் கோளாறால் உயிரிழந்ததையடுத்து சத்தியவதி சொன்னதெல்லாம் பொய் என்று லட்சுமி குடும்பத்தினர் நம்பி உள்ளனர். அவரது அடக்கம் முடிந்தகையோடு வீட்டைப்பூட்டிவிட்டு நகை பணத்துடன் சத்தியவதி வீட்டை காலி செய்ததால் அவர் மீது தன்வந்திரி நகர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையில் லட்சுமியின் மாமியார் உதயகுமாரி தன் பெயருக்கு இருந்த வீட்டை அடமானம் வைத்து சத்தியவதியிடம் பணத்தை கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. புதுச்சேரி நைநார்மண்டபம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த டுபாக்கூர் மந்திரவாதி சவடால் சத்யவதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நோயால் பாதிக்கப்பட்டால், தகுதியான மருத்துவரை அணுகி உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதை விடுத்து மூட நம்பிக்கையின் பிடியில் சிக்கி இருந்தால் என்ன மாதிரியான விபரீத நிலை ஏற்படும் என்பதற்கு சாட்சியாகி இருக்கிறது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments