மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு - ஆளுநரின் அழைப்புக்கு காத்திருப்பு

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேவேந்திர பத்னாவிஸ் புதிய முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தாவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் இன்று மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. இதனால், ஆளுநரின் அடுத்தகட்ட முடிவுக்காக பாஜக காத்திருக்கிறது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
288 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 113 இடங்கள் உள்ள நிலையில், ஆளுநர் கோஷியாரியை சந்தித்து, பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தியாளர்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், பத்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு நாளை பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனாவின் 55 எம்.எல்.ஏக்களில் 39 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஷிண்டேயின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் பாஜக தரப்பில் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments