முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா.!

மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார். நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து பதவிவிலகல் கடிதத்தை நேரில் சமர்ப்பித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உறுப்பினர்கள் 39 பேர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கு கோருமாறு உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என உத்தரவிட்டது.
போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவின்றி சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து தொலைக்காட்சி நேரலையில் ராஜினாமா செய்யப் போவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
தமது கட்சியினரே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறிய அவர், வீதியில் ரத்தம் சிந்தப்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தமது எம்.எல்.சி பதவியையும் ராஜினாமா செய்வதாக உத்தவ் அறிவித்தார்.
பின்னர் நள்ளிரவில் ஆளுநரை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை அளித்தார் உத்தாவ் தாக்கரே. அவர் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, மாற்று ஏற்பாடு செய்யும் வரை பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கவுஹாத்தியில் இருந்து புறப்பட்டு, கோவா வழியாக மும்பை திரும்புகின்றனர்.
Comments