சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம்..!

0 2301

சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான இடங்களில் வீடுகள், வணிக வளாகங்கள் மழைநீர் புகுந்தது.  

சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மாநகரில் பச்சப்பட்டி, நாராயணநகர், கிச்சிப்பாளையம், சீலநாயக்கன்பட்டி, கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மாநகர் பகுதியில் உள்ள குமரகிரி ஏரி நிரம்பி, பல்வேறு கால்வாய்கள் வழியாக உபரிநீர் வெளியேறியது. இந்த நீர் சிறுமணிமுத்தாற்றை அடைகிறது.

 

கடும் வெயில் காரணமாக, இத்தனை நாட்களாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்த சிறுமணிமுத்தாற்றில், தற்போது கால்வாய் நீர் வந்து சேர்வதால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சேலம் மாநகரை ஒட்டிய பகுதிகளில் உள்ள பல ஏரிகள் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளதாகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

image

 

இதனிடையே நேற்றிரவு மழை பெய்தபோது, நண்பர்களுடன் திரைப்படத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய முகமது சாத் என்ற 15 வயது சிறுவன், மழைவெள்ளம் பெருக்கெடுத்த ஓடையில் தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

image

சிறுவனை அவனுடன் வந்த மேலும் 2 சிறுவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனளிக்காததால், சிறுவனின் வீட்டில் தகவலை தெரிவித்ததாகவும், அது தொடர்பான புகாரில் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் விடிய விடிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 

மாநகர் பகுதிகளில் உள்ள ஓடைகளை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், 10 அடி அகலம் வரை இருந்த ஓடை தற்போது 5 அடிக்கும் குறைவாக சுருங்கிவிட்டதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

image

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவின்பேரில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஓடை ஆக்கிரமிப்புகள் தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments