அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக அறிவிப்பு.!

0 2382

பெரும் எதிர்ப்பார்புகளுக்கு இடையே நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இடையே நடந்த சட்டப் போராட்டம், கருத்து மோதல்களுக்கு மத்தியில் சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். மேலும், கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் படையெடுத்ததால் சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

இந்நிலையில், பசுமைவழிச்சாலை இல்லத்தில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு 10க்கும் மேற்பட்ட வாகனங்களின் அணிவகுப்புடன் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பூத்தூவி வரவேற்பளித்தனர். அதிமுக கொடியை பிரதிபலிக்கும் விதமாக கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பலூன்களை ஏந்தி அவரை தொண்டர்கள் வரவேற்றனர்.

 

அதேபோல், கோமாதா பூஜை செய்தபின் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், கும்ப கலச மரியாதை செய்தும் வரவேற்பளித்து வாழ்த்தினர்.

 

பின்னர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.
ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும் இரட்டை தலைமை வேண்டாம் என்றும் மண்டபம் முழுவதும் கட்சியினர் முழக்கமிட்டனர். நிகழ்ச்சி மேடையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடுவில் அமர்ந்திருக்க இருபுறமும் பன்னீர்செல்வம், பழனிசாமி அமர்ந்தனர்.

 

மேடையில் வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதையை செலுத்தியபின் கூட்டம் தொடங்கியது.

 

23 தீர்மானங்களை பொதுக்குழு ஒப்புதலுக்கு பொன்னையன், முன்மொழிந்த நிலையில், பொதுக்குழு மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார்.

இதனை அடுத்து பேசிய கே.பி.முனுசாமி, ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழு நடைபெறும் என்றும், ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு எஞ்சிய தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

மேலும், 23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்ததாகவும், அவர் தெரிவித்தார்.

 

பின்னர், அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்ட மனுவை சி.வி.சண்முகம் வழங்கினார். பின்னர் பேசிய தமிழ்மகன் உசேன், ஜுலை 11ஆம் தேதி அடுத்த அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தார்.

 

இதனை அடுத்து, கூட்டம் முடியும் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினர்.

 

இதனை அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டதாக கூறினார்.

 

கூட்டம் நிறைவடையும் முன், எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி கிரீடமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது.

இதனிடையே, சட்டவிரோதமாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக கூறிவிட்டு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து புறப்பட்டார்.

 

ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாகவும், பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி, கூட்டத்தில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசபட்டது.

 

இந்நிலையில்,  அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து அறிவித்ததும் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது என பன்னீர்செவம் தரப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments