பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி.. புதிய தீர்மானங்களுக்குத் தடை.. இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.!

0 3307

இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு பொதுக் குழு கூட்டத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. நிகழ்ச்சி நிரல்களில் உள்ள  23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சி உறுப்பினர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார்.

மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வில் நள்ளிரவில் விசாரணைக்கு வந்தது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., மனுதாரர் ஆகிய 3 தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நிகழ்ச்சி நிரல்களில் கொடுக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்டனர்.

மேலும் உள்கட்சி விவகாரங்கள் குறித்து பொதுக் குழு செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசிக்கலாம் என்றும் அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரல்களில் உள்ள 23 தீர்மானங்களை தவிர்த்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விவகாரங்கள் குறித்து முடிவு எடுப்பதற்கும், அதை தீர்மானமாக செயல்படுத்துவதற்கும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments