நாட்டின் 16-வது குடியரசுத் தலைவர் தேர்தல்.. திரௌபதி முர்மு Vs யஷ்வந்த் சின்ஹா..!

0 2276
நாட்டின் 16-வது குடியரசுத் தலைவர் தேர்தல்.. திரௌபதி முர்மு Vs யஷ்வந்த் சின்ஹா..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்முவை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் ஜேபி நட்டா இதனை அறிவித்தார். வரும் 25 ஆம் தேதி திரௌபதி தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.

64 வயதான திரவுபதி முர்மு ஒடிசாவின் சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஒடிசாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராகப் இருந்த இவர், 2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் பதவியில் நீடித்தார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் முர்மு என்றும், சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.
சந்திரசேகர், வாஜ்பாய் ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட யஷ்வந்த் சின்ஹா பின்னர் பாஜகவில் இருந்து விலகினார். திரிணாமூல் காங்கிரசில் இணைந்த அவர், அக்கட்சியின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். யஷ்வந்த் சின்கா 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments