5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

0 1960

5ஜி வலையமைப்புச் சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்தத் தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவையை விடப் பத்து மடங்கு வேகமாகச் செயல்படும் திறனுள்ள 5ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கெனவே 5ஜி வலையமைப்புக்கான கருவிகளை நிறுவிச் சோதனை நடத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதற்கான ஏலத்தை ஜூலை இறுதிக்குள் நடத்தத் தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. அதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனங்களுக்கு உடனடியாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும்.

இதையடுத்துப் பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் விரைவில் 5ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை இப்போதுள்ள 4ஜி சேவையைவிடப் பத்துமடங்கு வேகத்துடன் செயல்படும் திறனுள்ளது எனக் கூறப்படுகிறது.

5ஜி சேவைகள் புதிய வணிக வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டித் தரும் எனச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனங்கள் தொகையை ஒரேமுறையில் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை என்றும், 20 ஆண்டுத் தவணைகளாகச் செலுத்தலாம் என்றும், வங்கி உத்தரவாதம் தேவையில்லை என்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments