முதல் பயணத்தில் முதல் தனியார் ரயில்..!

0 2229
முதல் பயணத்தில் முதல் தனியார் ரயில்..!

நாட்டிலேயே முதல் முறையாக தனியாரால் இயக்கப்படும் ரயில் கோவையில் இருந்து சீரடிக்கு பயணத்தை தொடங்கியது. திருப்பூர், ஈரோடு,சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக செல்லும் ரயிலில் 1,500 பேர் பயணித்தனர்.

மத்திய அரசின் 'பாரத் கௌரவ்' திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் இருந்து ஷீரடிக்கு முதலாவது ரயில் சேவை தொடங்கியது.

கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இந்த ரயிலை இயக்குகிறது. வட கோவை ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் இயக்கப்பட்ட நிலையில், அங்கு மேளதாளங்கள் முழங்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த ரயிலில் பயணிக்க ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக ஷீரடிக்கு அந்த ரயில் சென்றடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து ஆயிரத்து 433 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சீரடி செல்லும் ரயில், மந்திராலயாவில் மட்டும் 5 மணி நேரம் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலின் உள்பக்கம் பிரத்யேகமாக நாற்காலிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ரயிலில் ஒரு மருத்துவர் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவர் அவசர கால சேவைக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தனியாக கட்டணம் செலுத்தி உணவுகளை ஆர்டர் செய்துகொள்ளலாம் என்றும் சப்பாத்தி, சாத வகைகள், சமோசா, சாண்ட்விச், சூப் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சீரடி சென்று மீண்டும் கோவைக்கு ஐந்து நாட்கள் பயணிக்கும் இந்த ரயிலில் செல்ல அதிகபட்ச கட்டணமாக 13 ஆயிரம் ரூபாயும், குறைந்தபட்ச கட்டணமாக 2 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் கட்டணம் மற்றும் பேக்கேஜ் கட்டணம் என்று இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பேக்கேஜ் பிரிவில் ஷீரடியில் சிறப்பு தரிசனம், மூன்று பேர் தங்கும் ஏ.சி அறை, காப்பீடு, ஷீரடி ரயில் நிலையத்திலிருந்து சாலைப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments