ஓட்டுனர் கடத்திக் கொலை.. ஏட்டையா செய்த சேட்டையால் அல்லோலப்படும் போலீஸார்..! காதல் மோகத்தால் ஆவேசம்..!

0 3544
ஓட்டுனர் கடத்திக் கொலை.. ஏட்டையா செய்த சேட்டையால் அல்லோலப்படும் போலீஸார்..! காதல் மோகத்தால் ஆவேசம்..!

சென்னையில் இளைஞரை கடத்திக் கொலை செய்து உடலை எரித்த போலீஸ் ஏட்டுவை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர். ரகசிய காதலி மீதுள்ள மோகத்தால் கொலைப்பழியோடு சுற்றும் கேடி ஏட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கேகே நகர் விஜயராகவபுரம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான ரவி. ஆக்டிங் ஓட்டுநரான இவர், எம்.எம்.டி.ஏ அருகே ஹார்டுவேர் கடையிலும் வேலை செய்து வந்தார்.

தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணி புரிந்து வரும் இவரது மனைவி ஐஸ்வர்யா, தனது கணவர் ரவியை காணவில்லை என கடந்த 31-ஆம் தேதி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதலில் காணாமல் போன ரவி குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்தபோது அதே நாளில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் என்பவர் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கோயம்பேடு காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வந்த செந்தில்குமார், சமீபத்தில் செம்பியம் காவல் நிலைய குற்ற பிரிவு தலைமை காவலராக இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் கடந்த 10 நாட்களாக காவல் நிலைய பணிக்கு செல்லாமல், ரகசிய காதலி கவிதாவுடன் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

ஊட்டி, கொடைக்கானல் என சுற்றிவிட்டு ஏட்டையா ரிட்டர்ன் ஆகிவிடுவார் என்று போலீசாரும் காத்திருந்த நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அது காணாமல் போனதாக கூறப்பட்ட ஓட்டுனர் ரவியின் சடலம் என்று கண்டுபிடித்த போலீசார், கருகிய நிலையில் காணப்பட்ட சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்ட ரவியின் , ஒரு கால் பழைய இரும்பு கடையிலும், ஒரு கை புதர் பகுதியிலும் கிடந்தது. ஏட்டு செந்தில்குமாருடன் தாலிகட்டாமல் குடித்தனம் நடத்திவந்த காதலி கவிதாவை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது

ரவியும், செந்தில்குமாரும் மது அருந்தி பொழுது கழிக்கும் நண்பர்களாக இருந்துள்ளனர். கொல்லப்பட்ட ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும், ஏட்டுவின் காதலி கவிதாவுக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதானம் பேசும் போது நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

காவல்துறையில் ஏட்டுவாக உள்ள நம்மை சிறிய வயதுள்ள ரவி இழிவாக பேசிவிட்டானே என்று செந்தில் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கடந்த 31-ஆம் தேதி ஐஸ்வர்யா பணிக்கு சென்று விடவே இரவு வீட்டில் தனியாக இருந்த ரவியை மது அருந்த அழைத்துச் சென்று வீட்டில் வைத்து அடித்துக் கொலை செய்து, சடலத்தை காரில் ஏற்றிச்சென்று அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தீவைத்து எரித்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செந்தில்குமார் கூட்டாளிகளுடன் வந்து, ரவியை அழைத்து சென்றதை அப்பகுதியில் இருந்த மக்கள் பார்த்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமை காவலர் செந்தில்குமாரின் மனைவி குழந்தைகள் எல்லாம் சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் செந்தில்குமார் குடும்பத்தை பிரிந்து காதலி கவிதாவுடன் வாடகை வீடுகளில் மாறி மாறி வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

காதலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கவிதாவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தலைமை காவலர் செந்தில்குமாரை அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலைக்கான முக்கிய காரணம் முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் கைது செய்யப்பட்ட பிறகே பின்னணி தெரிய வரும் என கேகே நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கே.கே நகர் ரவி கொலை வழக்கு படாளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  செம்பியம் காவல்நிலைய தலைமை காவலர் செந்தில் குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். செந்தில்குமாரின் காதலி கவிதா விசாரணைக்காக படாளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செந்தில் குமாரையும் அவரது கூட்டாளிகளையும் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments