காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தையை கொன்ற பெண்கள்..! தீய சக்தி சித்ரவதையின் பின்னணி

0 3142

அரக்கோணம் அருகே பச்சிளம் ஆண் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் பெண்ணின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தோல் ஷாப் பகுதியில் வசித்து வருபவர் மனோ. பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.

இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு, தேவதானபட்டினத்தை சேர்ந்த அம்சா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் உறவினர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு குழந்தைக்கு தாய் அம்சா நந்தினி பால் கொடுத்து, தூங்க வைத்து விட்டு, மாமியாருடன் தரையில் ஒன்றாக படுத்து உறங்கியுள்ளார். அருகில் உள்ள கட்டிலில் கணவர் மனோ படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

மீண்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். மீண்டும் 2 மணிக்கு எழுந்து பார்த்த போது குழந்தை இல்லாததை கண்ட அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்து கணவர், மாமியாரை எழுப்பி விசாரித்துள்ளார்.

வீட்டிற்குள் பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட் நீரில் மூழ்கிய நிலையில் தலைகுப்புற இறந்த நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

தந்தை மனோ அளித்த புகாரின் பேரில் நகர காவல்துறையின்ர் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அத்தை மகளை திருமணம் செய்யாத ஆத்திரத்தில் நடந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மனோவின் அத்தை தேன்மொழிக்கு சொத்தில் பங்கு கொடுக்காமல் அவரது மகள் பாரதியை தனது வீட்டுக்கு மருமகளாக்கிக் கொள்வதாக மனோவின் தந்தை வாக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் அத்தை மகளை திருமணம் செய்யாத மனோ, வேறு சாதியை சேர்ந்த பெண்ணான அம்சா நந்தினியை காதலித்து திருமணம் செய்ததால் , மனோ மீது தேன்மொழி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

மனோவின் காதல் மனைவி அம்சா நந்தினிக்கு இரு வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் , அவரை வெட்டி விட்டு விட்டு தனது மகள் பாரதியை மனோவுக்கு 2 வது திருமணம் செய்து வைத்து விடலாம் என்று காத்திருந்த தேன்மொழி , அம்சா நந்தினியை தீயசக்தி பிடித்திருப்பதாக கூறி வேப்பில்லையால் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே கர்ப்பம் தரித்த அம்சா நந்தினி அழகான ஆண்குழந்தையையும் பெற்றதால், தேன்மொழி கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை பார்க்க வந்தது போல மனோ வீட்டில் தங்கி இருந்த தேன்மொழியும், பாரதியும், நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்னர் குழந்தையை தூக்கிச்சென்று கழிவறை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

கொலைகாரப்பெண் தேன் மொழியையும், அவரது மகள் பாரதியையும் போலீசார் கைது செய்தனர். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த இரு பெண்களையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததற்கு உடந்தையாக இருந்ததாக மனோவின் உறவினர் அனுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments