டூத் பிரஷ்ஷால் சிக்கிய சூப்பர் மார்க்கெட் ஊழியர்.. பல லட்ச ரூபாய் மோசடி கண்டுபிடிப்பு..!

0 32964

சென்னையில் டூத் பிரஷை மாற்ற வந்த வாடிக்கையாளரால், சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற லட்சக் கணக்கான ரூபாய் பண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 40 ஆண்டுகளாக மாயா ராம் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளரான சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ராஜேஷ் என்ற தனது ஊழியர், தவறான கணக்கு காட்டி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பாக கூறியிருந்தார்.

வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டுகளில், கம்யூட்டர் பில்கள் வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறான கம்யூட்டர் பில் தான், சுரேசின் சூப்பர் மார்க்கெட்டிலும் வழங்கப்படுகிறது. ஆனால், கம்ப்யூட்டர் பில் தொழில் நுட்பத்தை அறிந்து வைத்திருந்த ஊழியர் ராஜேஷ், வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கான பில்லை, கணிணியில் Save செய்த பிறகு வழங்காமல், அப்படியே பிரிண்ட் கொடுத்திருக்கிறான். பின்னர், வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்றதும், கணினியில் உள்ள பில்லில் மாற்றம் செய்து, தொகையை சரிபாதியாக குறைத்து, அந்த பில்களை கணினியில் சேமித்திருக்கிறான். இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு, தாம் குறைத்துள்ள பில்லின் தொகையை, தனது பாக்கெட்டில் போட்டுக்கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறான்.

பல நாள் திருடன், ஒருநாள் அகப்படுவான் என்ற முதுமொழிக்கு ஏற்ப, வாடிக்கையாளர் ஒருவர், தாம் வாங்கிய டூத் பிரஷை மாற்றுவதற்காக வந்தபோது, அந்த சமயத்தில் ராஜேஷ் கல்லாவில் இல்லாததால், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுரேசிடம் அவன் சிக்க நேரிட்டுள்ளது.

வாடிக்கையாளர் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் பில்லை வாங்கிப் பார்த்த கடை உரிமையாளர் சுரேஷ், பொருளை மாற்றுவதற்காக, பில் எண்ணை வைத்து கணினியில் தேடியபோது, கம்யூட்டரில், சேவ் ஆகியிருந்த பில்லில் வெறும் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் மட்டுமே பொருட்கள் வாங்கியது போன்று இருந்ததை கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார். இதுகுறித்த விசாரணையின்போது தான், தாம் செய்த தில்லாலங்கடி வேலைகளையெல்லாம், ஒன்றுவிடாமல், மனம் திறந்து ஒப்புவிப்பதுபோல், வரிசையாக ராஜேஷ் ஒப்புக் கொண்டிருப்பதாக, தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், தான் 5 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் தவறாக கணக்கு காட்டி திருடியதாக ராஜேஷ் ஒப்புக்கொண்டிருக்கிறான். ஆனால், வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில், சுமார் 45 லட்ச ரூபாய் வரையில் அவன் சுருட்டியிருப்பது கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது, நல்லவன் போல், பணத்தை திருப்பித் தருவதாக கூறி போலீசிடமே கடிதம் எழுதி கொடுத்துவிட்டு கம்பி நீட்டிய நிலையில், கோயம்புத்தூரில் வைத்து, மோசடிப் பேர்வழி ராஜேசை, கொத்தாக அள்ளி வந்திருக்கின்றனர், சென்னை தனிப்படை போலீசார்.....

சொந்த ஊரில் வீடு, கார் என சொகுசாக, ஜபர்தஸ்தாக வலம் வந்த ராஜேஷ், தன்னை நம்பி கல்லாவை ஒப்படைத்த ஓனரிடம், ஏழை வேஷம் கட்டி ஏமாற்றியதும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தை வேலை பார்த்த அதை கடையில் வேலை.... சாதாரண ஊழியராக சேர்ந்து, கல்லாவை கவனிக்கும் அளவுக்கு 10 ஆண்டுகால நம்பிக்கை என, அனைத்தையும்., குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க நினைத்து, தவிடுபொடியாக்கிய ராஜேஷ், தற்போது, சிறையில் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments