ஆனாலும் பாட்டீம்மா இந்த அலும்பு கூடாது..! அரசு பேருந்து அவஸ்தைகள்..! பணிமனைக்கு போற வண்டியில் ஏறி லொள்ளு..!

0 2425
ஆனாலும் பாட்டீம்மா இந்த அலும்பு கூடாது..! அரசு பேருந்து அவஸ்தைகள்..! பணிமனைக்கு போற வண்டியில் ஏறி லொள்ளு..!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பணிமனைக்கு புறப்பட தயாராக இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்ட மூதாட்டி ஒருவர் உரிமையுடன் பேருந்தை தனது வீடு இருக்கும் பச்சாப்பாளையத்திற்கு எடுக்கச் சொல்லி அடம்பிடித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 50 ஆம் நம்பர் நகரப் பேருந்து ஒன்று பயணிகளை எல்லாம் இறக்கிவிட்டு பணிமனைக்கு புறப்படுவதற்கு முன்பு நடத்துனரும், ஓட்டுனரும் தேனீர் அருந்த சென்றுள்ளனர். அவர்கள் வருவதற்குள்ளாக 70 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் மூட்டை முடிச்சிகளுடன் அந்த பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார்.

அந்த மூதாட்டியிடம் இந்த பேருந்து பணிமனைக்கு செல்வதாக கூறிய நடத்துனர், பேருந்தில் இருந்து இறங்கச்சொன்னார். ஆனால் அந்த மூதாட்டியோ பச்சபாளையத்திற்கு வண்டியை விடுமாறு அசால்ட்டாக தெரிவித்தார்.

அதற்கு நடத்துனரோ, அம்மா இது 50 ஆம் நம்பர் பேருந்து பச்சபாளையம் எல்லாம் போகாது. இது காந்திபுரம், உக்கடம், ஆத்துப்பாலம், மதுக்கரை, வழியாக பாலத்துறை தான் போகும், இப்போ பணிமனைக்கு போகிறோம் இறங்குங்க என்று கனிவாக கூற, பாட்டீம்மாவோ கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தபடியே வண்டிய பச்சபாளையத்துக்கு விடுங்க என்றார்.

பேருந்து பணிமனைக்கு போகுது பாட்டீம்மான்னு ஓட்டுனரும் தன் பங்கிற்கு சொல்ல, பாட்டீம்மா பஸ்ஸ பச்சபாளையத்திற்கு போகச்சொன்னதால் நடத்துனரும், ஓட்டுனரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போயினர்.

எங்கே இந்த மூதாட்டியை பேருந்தில் இருந்து வேகமாக இறக்கி விட்டால், யாராவது செல்போனில் வீடியோ எடுத்து பரப்பி பிரச்சனையாக்கிவிடுவார்களோ..? என்று பயந்த நடத்துனர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே பாட்டீம்மாவை பேருந்தில் இருந்து இறங்கவைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

பேருந்தில் இருந்து மூதாட்டி இறங்க மறுத்ததால், 50 ஆம் நம்பர் பேருந்து அங்கிருந்து புறப்படாமல் அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றது. ஒரு கட்டத்தில் பார்ப்பதற்கு பரிதாபமாக நின்ற நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது இறக்கப்பட்ட பாட்டீம்மா, அதில் இருந்து இறங்கி வேறு ஒரு பேருந்தில் ஏறி பச்சபாளையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து பணியாளர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் இது போன்ற சத்திய சோதனைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அரசு பேருந்தில் பிரச்சனை என்றால் உடனடியாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை மேற்கொள்வது சரியா? என்று கேள்வி எழுப்பும் தொழிற்சங்கத்தினர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments