எஸ்.பி பாராட்டினால் காலால் ஆட்டோ ஓட்டுவீங்களா ஆபீசர்? விபத்தை தேடிச்செல்லும் ரூட்டுக்காரன்..!

0 3760

ஒரு காலத்தில் சிறப்பான பணிக்காக போலீஸ் எஸ்.பியிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், கைகளை விட்டு கால்களை மட்டும் பயன்படுத்தி ஆட்டோவை விபரீதமான முறையில் முன்னாலும், பின்னாலும் இயக்கி வருகின்றார்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்க்கஸ் சகாயராஜ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுனராக உள்ள இவர் ஆட்டோ ஓட்டுவதில் பல்வேறு சாகசங்களில் ஈடுபடுவதால் சர்க்கஸ் சகயாராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை ஆட்டோவில் துரத்திச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தவர் சகாயராஜ் , இதனால் அப்போதைய நாகர்கோவில் எஸ்.பியாக பணிபுரிந்த அருண் ,சகாயராஜை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இரண்டு கைகளையும் ஒழுங்காக பிடித்து ஆட்டோ ஓட்டினாலே எங்காவது கொண்டு இடித்து நிறுத்தும் ஓட்டுனர்கள் மத்தியில் இரு கைகளையும் விட்டு விட்டு கால்களால் ஆட்டோவின் கைப்பிடியை தாங்கிப்பிடித்துக் கொண்டு ஆட்டோவை ஓட்டி உள்ளார் சகாயராஜ். இதனை அவருக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்

விபரீதத்தை உணராமல் சகாயராஜ் காலால் ஆட்டோ ஓட்டி செய்த சாகச வீடியோ காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் ஆட்டோவை பின்னோக்கி காலால் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்

ஆட்டோவில் இரு கைகளை விட்டு சாகசம் செய்யவது, 8 போடுவது, ஆட்டோவில் விலிங் செய்வது மற்றும் பல்வேறு சாகசங்களை செய்து தன்னை நாலு வித்தைகளும் தெரிஞ்ச ரூட்டுக்காரனாக காட்டிக் கொண்ட சகாயராஜுக்கு , சாலையில் தான் செய்யும் சாகசங்கள் போக்குவரத்து விதிமீறல் என்பது தெரியவில்லை...!

ஏற்கனவே ஒற்றை வீலில் சாகசம் செய்த பைக்கர்ஸ் தங்கள் பைக்கை பறிகொடுத்து விட்டு ஜெயிலில் கம்பி எண்ணிய நிலையில் 3 சக்கர தேரை இரு சக்கர வாகனமாக்கி சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆட்டோக்காரர் சகாயராஜ். இந்த சாகசங்களை ஏதாவது ஒரு மைதானத்தில் செய்தால் கூட ரசிக்கலாம் பலர் செல்லும் சாலையில் செய்வது அவருக்கு மட்டுமல்ல அவர் ஓட்டிச்செல்லும் ஆட்டோவுக்கும் கேடு என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments