பிரதமர் மோடி இன்று சென்னை வருகை... ரூ.31,400 கோடி திட்டங்கள் தொடக்கம்..!

0 3661

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புடைய 11 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

மதுரை-தேனி இடையிலான ரயில்பாதை, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன்,
எழும்பூர், காட்பாடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை ஆகிய 5 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனாவின் கீழ் 116 கோடி ரூபாய் செலவில் 1152 வீடுகள் லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதை பிரதமர் காணொலி வாயிலாகப் பார்வையிடுகிறார்.

திருவள்ளூர்-பெங்களூர் இடையே குழாய் மூலமாக எரிவாயு விநியோகத் திட்டத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

பெங்களூர்- சென்னை இடையேயான 262 கிலோமீட்டர் நீள அதிவிரைவுச் சாலை, சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு பறக்கும் சாலை ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமரின் வருகையை ஒட்டி விமான நிலையம் முதல் நேரு அரங்கம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில்  பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments