சொத்துகளை பிரித்த தந்தை.. சகோதரிகளுக்கும் சென்ற சரிபாதி சொத்து.. தகப்பனை துண்டுத்துண்டாக வெட்டிய மகன்..!

0 4370
சொத்துகளை பிரித்த தந்தை.. சகோதரிகளுக்கும் சென்ற சரிபாதி சொத்து.. தகப்பனை துண்டுத்துண்டாக வெட்டிய மகன்..!

சென்னையில் சகோதரிகளுக்கும் சரிபாதியாக சொத்துகளை எழுதி வைத்த ஆத்திரத்தில் தந்தையை துண்டுத் துண்டாக வெட்டி கொலை செய்து புதைத்துவிட்டு, அவரைத் தேடுவது போல் நாடகமாடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் தாண்டவ மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் 78 வயதான குமரேசன். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில், மூவருக்கும் திருமணமாகிவிட்டது. அவர்களில் மூத்த மகள் காஞ்சனமாலா கணவனை இழந்து தந்தையுடன் அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் மேல் மாடியில் குமரேசனின் மகன் குணசேகரன் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி காஞ்சனமாலா அவரது மகள் வீட்டிற்கு சென்றுவிட, முதியவர் குமரேசன் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை வீடு திரும்பிய காஞ்சனமாலா, தனது தந்தையின் அறை பூட்டிக் கிடந்ததால் சந்தேகம் அடைந்து சகோதரர் குணசேகரனிடம் விசாரித்துள்ளார். வீட்டில்தான் இருந்தார், தான் பார்க்கவில்லை என கூறிய குணசேகரன், வெளியில் சென்று தேடலாம் என காஞ்சனமாலாவை அழைத்துக்கொண்டு அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார்.

வடபழனி கோயிலுக்கு சென்றிருக்கலாம் என்று கூறி காஞ்சனமாலாவுடன் அங்கு சென்ற குணசேகரன், கோவில் வாயிலில் அவரை விட்டுவிட்டு, வேறு இடத்தில் தேடிப் பார்ப்பதாகக் கூறிச் சென்றுள்ளார். போனவர் திரும்பி வராத நிலையில், அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தனியாக வீடு திரும்பிய காஞ்சனமாலா, தந்தையின் அறைக் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அறைக்குள் ஆங்காங்கே ரத்தத் துளிகள் காணப்பட்டதோடு, துர்நாற்றமும் வீசி இருக்கிறது. இதனால் தனது தந்தைக்கு ஏதோ நடந்து இருக்கிறது என அறிந்த காஞ்சனமாலா உடனடியாக வளசரவாக்கம் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். திடீரென செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்ற மகன் குணசேகரன் குறித்து விசாரிக்க தொடங்கி செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

அதில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சென்று வந்ததும் அங்கு ஒரு நபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதும் தெரியவந்தது. காவேரிபாக்கம் விரைந்த போலீசார், குணசேகரன் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

குணசேகரன் தனது நண்பர் எனவும் டைல்ஸ் கடை வைப்பதற்கு அவர் இடம் தேவை எனக் கேட்டதாகவும் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இடத்தைப் பார்க்க டாடா ஏஸ் வாகனத்தில் வந்த குணசேகரன், வாகனத்தின் பின்பக்கம் நீல நிற பேரல் ஒன்றையும் கொண்டுவந்துள்ளார்.

அதுகுறித்து வெங்கடேஷ் கேட்டதற்கு, தனது தந்தைக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டனர் என்றும் அதற்காக மாந்திரீகர்கள் மூலம் அந்த செய்வினையை கழித்துபொருட்கள் பேரலுக்குள் இருப்பதாகவும் அவற்றை புதைக்க எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளான்.

அதன்படி கூலிக்கு ஆள் வைத்து பள்ளம் தோண்டி, அந்த பேரலை புதைத்த குணசேகரன், அங்கிருந்து தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர். பேரலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், தலைமறைவாகவுள்ள குணசேகரனையும் தேடி வருகின்றனர்.

கடந்த 15-ஆம் தேதி அன்று குணசேகரன் தனது தந்தையை கொலை செய்திருக்கக்கூடும் என்றும் 2 நாட்களாக சடலத்தை வீட்டிற்குள்ளேயே வைத்துவிட்டு, தனது சகோதரி வந்து கேட்கத் தொடங்கியதும் தேடுவது போல் நாடகமாடி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குமரேசன் தனது மகள்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததோடு, சொத்தில் சரி பாதி அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் குணசேகரனுக்கு உடன்பாடு இல்லை எனவும் இந்த ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments