பேரறிவாளன் விடுதலை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. 31 ஆண்டுகால சிறைவாசம் முடிவு..!

0 12898
பேரறிவாளன் விடுதலை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. 31 ஆண்டுகால சிறைவாசம் முடிவு..!

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 31ஆண்டுக்காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் சென்னை அருகே திருப்பெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் உடலில் குண்டுகளைக் கட்டி வந்த பெண் மற்றும் 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரித்த சிபிஐ, கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி 1991 ஜூன் 11ஆம் நாள் பேரறிவாளனைக் கைது செய்தது.

1998ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. 1999ஆம் ஆண்டு நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2000ஆவது ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2014 பிப்ரவரி 18ஆம் நாளில் உச்ச நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2014 பிப்ரவரி 19ஆம் நாள் தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

பேரறிவாளனை விடுவிக்கத் தீர்மானித்த மாநில அரசின் தீர்மானத்தை நிறைவேற்றாமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். இதனிடையே சிறையில் இருந்து அவ்வப்போது பரோல் பெற்று வெளியே வந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் 9ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிப் பேரறிவாளன் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் வாதங்கள் நடைபெற்றன.

மே 11ஆம் நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய், போபண்ணா அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்படி உச்சநீதிமன்றமே விடுதலை செய்வதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments