இந்திய பொருளாதாரத்திற்கு 450 பில்லியன் டாலர் அளவுக்கு 5ஜி சேவை பங்காற்றும் - பிரதமர் மோடி.!

0 2157

இந்திய பொருளாதாரத்தில் 450 பில்லியன் டாலர் அளவுக்கு 5ஜி சேவையின் பங்களிப்பு இருக்கும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை தொடங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற டிராய் அமைப்பின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி தலைமையிலான 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி பரிசோதனைக் கருவியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் வெளியிட்டார்.

நாட்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அலைவரிசை சோதனை கருவி வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றல்களை உட்புகுத்தி உள்ளதாகவும், நாட்டின் ஒவ்வொரு கிராமமும் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

5ஜி தொழில்நுட்பம் நாட்டின் நிர்வாகத்திலும், மக்களின் வாழ்விலும், எளிதாக தொழில் செய்வதிலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக கூறிய பிரதமர், அவை விவசாயம், சுகாதாரம், கல்வி என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்.

மேலும், 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு பங்கு வகிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்றும் அடுத்த 10 ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை தொடங்க முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை இரண்டில் இருந்து 200க்கும் மேல் விரிவடைந்துள்ளதாகவும், இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி மையமாக உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments