கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. 9 இடங்களில் சி.பி.ஐ சோதனை.!

0 2215

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, டெல்லி, சென்னை என மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பைக்கிராப்ட்ஸ் சாலையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் என சென்னையில் 3 இடங்களிலும், மும்பையில் 3 இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா உட்பட மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் சென்னையைச் சேர்ந்த பாஸ்கரராமன் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் Talwandi Sabo power limited என்ற மின்உற்பத்தி நிறுவனத்திற்கு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 250 சீனர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு விசா வழங்கியதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.

தற்போது ப.சிதம்பரம் டெல்லியிலும் அவரது மனைவி நளினி சிதம்பரம் சோதனை நடைபெறும் சென்னை வீட்டிலும் இருக்கின்றனர். கார்த்தி சிதம்பரம் தனது குடும்பத்தினருடன் லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது.

சி.பி.ஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், அதிகாரிகள் எதையும் கைப்பற்றவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2015-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 6 முறை சோதனை நடந்துள்ளதாகவும், அதை தனது அலுவலக கோப்புகளில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ அறிவித்துள்ளது. எம்.பி கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டரான சென்னையைச் சேர்ந்த பாஸ்கரராமன், பஞ்சாப்-ஐச் சேர்ந்த தனியார் நிறுவன பிரதிநிதி விகாஸ் மகாரியா ஆகியோர் மீதும் பஞ்சாப்பில் உள்ள தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் மற்றும் மும்பையில் உள்ள பெல் டூல்ஸ் என்னும் நிறுவனங்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments