சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க நேபாளத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.!

0 3821
சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க நேபாளத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.!

நேபாள நாட்டின் லும்பினியில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மைய கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள லும்பினிக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானத்தில் பயணமானார்.

நேபாளம் நாட்டின் லும்பினிக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமரை, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா நேரில் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, லும்பினியில் உள்ள மஹாமாயாதேவி கோவிலுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், புத்தர் அவதரித்த இடத்தில் மலர்தூவி பிரதமர் மோடி வணங்கினார் .

லும்பினியில் பேரரசர் அசோகர் எழுப்பிய தூணுக்கு விளக்கு ஏற்றி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். புத்தர் லும்பினியில் பிறந்ததற்கான கல்வெட்டு ஆதாரம் பொறிக்கப்பட்டுள்ள தூண் இதுவாகும்.

இதனை அடுத்து, லும்பினியில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மைய கட்டுமானத்திற்கு, நேபாள பிரதமர் ஷேர் பகதூருடன் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், அதற்கான சிறப்பு பூஜையிலும், பிரதமர் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

லும்பினியில் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனை அடுத்து, காத்மண்டு பல்கலைக்கழகம் - சென்னை ஐஐடி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட கல்வி, கலாச்சாரம் தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், லும்பினி புத்த மடாலயத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா - நேபாளம் இடையேயான நட்புறவு முன்னெப்போதும் விட தற்போது வலுவாக உள்ளதாகவும், அவை மொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் என்றும் கூறினார். மேலும், பண்டைய பண்பாட்டு விழுமியங்களை நேபாளம் இன்றளவும் பேணி பாதுகாத்து வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments