மனைவியை வீட்டிற்குள் அடைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவன்.. சுவற்றை உடைத்து மீட்ட காட்சிகள்.!

0 75266

200 க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகளை வைத்திருக்கும் பிரபல தொழில் அதிபரின் மகன் கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து, சுவர் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 200 க்கும் மேற்பட்ட மிட்டாய் கடைகளை நடத்தி வருபவர் ராகவாரெட்டி. இவரது மகன் ஏக் நாத் ரெட்டிக்கும் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு 75 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 19.5 லட்சம் மதிப்பில் தங்க வெள்ளி நகைகள், 35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் அது தவிர நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாகவும் வரதட்சனை பட்டியல் நீண்டுள்ளது.

மாபிள்ளை ஏக் நாத் ரெட்டிக்காக, தந்தை ராகவாரெட்டி அவரது தாய் பார்வதி, சகோதரி ஸ்ரீவித்யா ஆகியோர் வரதட்சனையாக மொத்தம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை பேரம் பேசி பெற்றதாக கூறப்படுகின்றது. இது போதாதென்று ஹைதராபாத்தில் வணிக வளாகம் ஒன்றை கூடுதல் வரதட்சனையாக கேட்டுள்ளனர். அது மட்டும் பிரகன்யாவின் பெற்றோர் வாங்கி கொடுக்கவில்லை

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 7 வயதில் மகள் உள்ள நிலையில் ஏக் நாத் ரெட்டி கூடுதல் வரதட்சனை கேட்டு தராத தனது மனைவியை விவாகரத்து செய்ய முயன்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை ஏக் நாத் ரெட்டி மேற்கொண்ட நிலையில் அவரது விவாகரத்து வழக்கு தள்ளுபடியானதால் மனைவியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி கடந்த 10 ந்தேதி வீட்டின் கீழ் பகுதியில் தனது மனைவி மற்றும் மகள் தங்கி இருக்கும் அறையின் மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

இருவரையும் சிறைவைக்கும் எண்ணத்தில் அவர்களது அறையில் இருந்து வெளியேற விடாமல் தடுப்புச்சுவர் ஒன்றை அமைத்த ஏக் நாத் ரெட்டி மனைவியும் மகளையும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தான் வீட்டிற்குள் சுவர் கட்டி சிறைவைக்கப்படுள்ள தகவலை தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார் பிரகன்யா. இதையடுத்து போலீசாருடன் ஏக் நாத் ரெட்டியின் வீட்டிற்கு விரைந்த பெற்றோர், அந்த தடுப்பு சுவற்றை உடைத்து பிரகண்யாவையும் அவரது 7 வயது மகளையும் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து குடும்ப வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பஞ்சகுட்டா போலீசார், வீட்டில் இருந்து தப்பியோடிய ஏக் நாத் ரெட்டியை தேடி வருகின்றனர்.

வீட்டிற்கு வந்த மருமகளை இனிமையாக கவனித்துக் கொள்ள தவறியதால் இனிப்பு வியாபாரி குடும்பத்தின் மீது வரதட்சனை கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments