இந்தியா- இலங்கை உறவு வலுப்பெறும் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டம்

0 1483

இலங்கையில் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்த 9ந் தேதி உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை அந்நாட்டின் பிரதமராக அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என்றும், இதில் 15 பேர் இடம்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
6-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதே தமது முதன்மையான இலக்கு என்று குறிப்பிட்டார். இந்தியா இலங்கை இடையிலான உறவு மேம்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதனிடையே, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. ரணில் தலைமையிலான அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டு, அதன்பின்னர் நாளை காலை 6 மணி வரை மீண்டும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments