டைல்ஸ் ஒட்ட வந்தவர் கழுத்தறுத்துக் கொலை.. புதுவீட்டில் புதைக்கப்பட்ட சடலம்..!

0 7445

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு டைல்ஸ் போடும் பணிக்கு வந்த வடமாநில இளைஞர் அதே வீட்டில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில், உடன் இருந்தவனே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். தனது புது வீட்டுக்கு டைல்ஸ் வேலை செய்வதற்காக பீகாரைச் சேர்ந்த பவன்குமார், அமீத், தானு ஆகிய மூன்று பேரையும் சேத்தியாதோப்பில் இருந்து கடந்த 5-ந் தேதி அழைத்து வந்திருக்கிறார். இவர்கள் ரமேஷ் கட்டி வரும் வீட்டின் மாடியில் தங்கி வேலை செய்து வந்தனர். வேலைக்கு வந்த மறுநாளே வேலை கஷ்டமாக இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லை எனக் கூறியும் தானு என்பவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், மீதமிருந்த இருவரும் வேலை செய்து வந்திருக்கின்றனர்.

இதற்கிடையில், வேறொரு இடத்தில் கூலி வேலை செய்து வந்த பவன்குமாரின் உறவினரான சோனாசைனி, பவன்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், மாம்பாக்கம் கிராமத்தில் நேரடியாக வந்து பவன்குமார் வேலை செய்த வீட்டுக்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது, பவன்குமாரின் ஆடைகள் ரத்தக்கறையுடன் அங்கு கிடந்ததோடு, துர்நாற்றம் வீசியுள்ளது. அதிர்ச்சியடைந்த சோனாசைனி கிராம மக்களிடம் கூறவே, கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

வீட்டு உரிமையாளர் ரமேஷும் அங்கு வந்ததை அடுத்து, வீட்டுக்கு முன் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டிருந்த பள்ளம் மீண்டும் மூடப்பட்டிருந்ததை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அதனை தோண்ட ஆரம்பித்தனர். அதில் பவன்குமாரின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பவன்குமாரின் சடலத்தை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை முன்னெடுத்தனர். பவன்குமாருடன் வேலை செய்து வந்த அமீத் மாயமாகியிருந்ததால், போலீசாரின் கவனம் அவன் பக்கம் திரும்பியது.

விசாரணையில், சம்பவத்தன்று அமீத்தும், பவன்குமாரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை அதிகமாகி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாய்த்தகராறு மோதலாக மாறவே, இரும்பு ராடை வைத்து பவன்குமாரின் பின்னந்தலையில் அமீத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில், பவன்குமார் மயங்கிவிட்ட நிலையில், பின்னர் கத்தியை வைத்து கழுத்தை அறுத்ததோடு, வீட்டுக்கு முன் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் சடலத்தை போட்டு புதைத்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்த அமீத், சேத்தியாதோப்பில் வேலை செய்து வந்த தனது நண்பனை சென்று சந்தித்திருக்கிறான். அங்கு, குடிபோதையில் தனக்கும் பவன்குமாருக்கும் தகராறு ஏற்பட்டு விட்டதாகவும், ஆத்திரத்தில் அவனை தாக்கிவிட்டதாக மட்டும் கூறிவிட்டு கொலை செய்து சடலத்தை புதைத்ததை மறைத்திருக்கிறான். அன்றைய தினம் இரவு அங்கேயே தங்கிய அமீத், பின்னர் யாரிடமும் சொல்லாமல் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமீத்தின் நண்பன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

போதை தலைக்கேறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த சம்பவம்.........

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments