ஐ.டி பெண்ணிடம் அபேஸ்... அமெரிக்கா தப்பிய போது ஏர்போர்ட்டில் கேடி லேடீஸ் லாக்..! போர்ச்சுகலில் வேலை என போர்ஜரியாம்..!

0 11026

சென்னையில் பணிபுரியும் ஐ.டி. பெண் ஊழியரிடம், கூடுதல் சம்பளத்துக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் ஏமாற்றி பெற்றுக் கொண்டு, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல முயன்ற தாய் மகளை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தன்ஷிகா, வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள Assyst Career Generating Pvt Ltd என்ற தனியார் நிறுவனத்தை நேரில் சென்று அணுகியுள்ளார்.

அங்கிருந்த கிளீனா கிரியேட்டர், மற்றும் அவரது தாய் அனிதா கிரியேட்டர்ஆகியோர் , தஞ்ஷிகாவிடம் நல்ல விதமாக பேசி போர்ச்சுக்கல் நாட்டிற்கு கூடுதல் சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 25 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் கொரோனாவை காரணம் காட்டி இழுத்தடித்து வந்தனர். போலீசில் புகார் அளிக்க போவதாக தன்ஷிகா, நெருக்கடி கொடுத்ததால், கொஞ்சம் கொஞ்சமாக 11 லட்சம் ரூபாய் வரை திரும்ப கொடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தாயும் மகளும் தங்கள் செல்போன் எண்ணை சுவிட்ஜ் ஆப் செய்து வைத்து விட்டு, அலுவலகத்தையும் மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக தன்ஷிகா அடையார் துணை ஆணையர் மகேந்திரனிடம் புகார் அளித்தார். இதையடுத்து தாய் மகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்கள் குறித்து தகவல் அளிக்க லுக் அவுட் நோட்டிசும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கிளீனா அமெரிக்காவிற்கு தப்பிச்செல்லும் திட்டத்துடன் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். கிளீனாவை வழியனுப்ப தாய் அனிதாவும் உடன் சென்றிருந்தார். குடி உரிமை சரிபார்ப்பு அதிகாரிகள் தாய் மகள் இருவரையும் பிடித்து வைத்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தாய் மகள் இருவரும் தன்ஷிகா மட்டுமில்லாமல் பல ஐ.டி ஊழியர்களிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பாட்டால் இது போன்ற கேடிகளிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்க வேண்டிய விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments