இன்ஸ்டாகிராம் இம்சை அரசியின் இரண்டு காதல்..! காதலனை கைபுள்ளையாக்கி தாக்குதல்..!

0 5655
இன்ஸ்டாகிராம் இம்சை அரசியின் இரண்டு காதல்..! காதலனை கைபுள்ளையாக்கி தாக்குதல்..!

இன்ஸ்டாகிராமில் இரு இளைஞர்களை காதலில் வீழ்த்திய பெண் ஒருவர், தன்னிடம் தங்க நகையை வாங்கிக் கொண்டு தண்ணிகாட்டிய முதல் காதலனை, இரண்டாவது காதலனை ஏவி புரட்டி எடுத்த சம்பவம் கன்னியாகுமரி அருகே அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 19-வயதான கல்லூரி மாணவன் ஷைஜூ . இவரை போதைக்கும்பல் ஒன்று கடத்திச்சென்று காட்டுப்பகுதியில் வைத்து அடித்து உதைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார் ஷைஜூவிடம் இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, இம்சையான இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம் அம்பலமானது.

ஷைஜூக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாகவிளை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் ஒரு வருடத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காதலான நிலையில், இன்ஸ்டாவில் பழகி காதலை வளர்த்துக் கொண்ட இருவரும் நேரில் சந்தித்து அடிக்கடி ஜோடியாக ஊர் சுற்றுவதை வாடிக்கையாக்கியுள்ளனர்.

மாணவி வசதி படைத்தவர் என்பதால் காதலன் ஷைஜூவுக்கு தாராளமாக விலையுயர்ந்த பரிசு பெருட்களையும் வாங்கி கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷைஜூ, அந்த மாணவியிடம், தனக்கு அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து, தங்க சங்கிலி மற்றும் மோதிரம் என 4-சவரன் தங்க நகைகளை கழற்றி வாங்கிச்சென்றுள்ளார். அதற்கு பின்னர் அந்த மாணவியுடனான தொடர்பை துண்டித்த ஷைஜூ, பலமுறை அந்த மாணவி செல்போனில் தொடர்பு கொண்டும் ஷைஜூ கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து சில மாதங்களில் இரண்டாவதாக கருங்கல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு இளைஞரை இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலையில் வீழ்த்திய அந்த மாணவி, புதிய காதலனுடனும் ஊர் ஊராக சுற்றி காதலை பலப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் தனது பழைய காதலன் ஷைஜுவை தொடர்பு கொண்டு, 'பார்க்கணும் போல இருக்கு'ன்னு உருக்கமாக பேசி ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார் அந்த மாணவி. நகையுடன் அறுந்து போன உறவை புன்னகையுடன் புதுப்பிக்கும் ஆசையுடன் டிப்டாப்பாக சென்றுள்ளார் ஷைஜு. ஆனால் அதற்கு முன்பாகவே தனது புதிய காதலன் சதீஷ்குமாரிடம், 'தனது ஆண் நண்பர் ஒருவர் தன்னிடம் நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு தராமல் ஏமாற்றியதோடு, நகைகளை திருப்பிக் கேட்டதால் நமது காதல் விவகாரத்தை வீட்டில் போட்டுக் கொடுத்து விட்டதாகக்' கூறி அந்த மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த புதிய காதலன் சதீஷ்குமார், ஷைஜூவுக்கு தக்க பாடம் புகட்டுவதாக கூறி மாணவியை ஆறுதல் படுத்தி உள்ளார். அங்கு வந்த ஷைஜுவை தனது ஆண் நண்பர் என்று அறிமுகப்படுத்திய அந்த மாணவி, அவரை அடையாளம் காட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் கடந்த 20 ந்தேதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஷைஜுவை மண்டைக்காடு இடுகாட்டு பகுதிக்கு கடத்திச்சென்ற சதீஷ்குமார், மாணவியிடம் ஏமாற்றிய நகையை கேட்டு அடித்து உதைத்து நையப் புடைத்துள்ளனர்.

தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லியது ஏன் ? என்றும் கேட்டும் சரமாரியாக ஷைஜுவை மொத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளது சதீஷ்குமார் கும்பல்.

இந்த சம்பவத்தை மாணவியிடம் விசாரித்து உறுதி படுத்திக் கொண்ட போலீசார், இரண்டாவது இன்ஸ்டா காதலன் சதீஷ்குமார், அவரது கூட்டாளி ஆனந்தராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இல்லாததாலும், படிக்கிற பெண் என்பதாலும் அந்த மாணவியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் இன்ஸ்டாகிராம் காதல் இம்சையில் விழுந்த ஒருவருக்கு தர்ம அடியும், மற்றொருவருக்கு ஜெயில் தண்டனையும் காதல் பரிசாக கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments