தண்டவாளத்தில் செல்ஃபி கானா குயிலை அடித்து தூக்கிய விரைவு ரெயில்..! வேண்டாமே விபரீதம்

0 2775
தண்டவாளத்தில் செல்ஃபி கானா குயிலை அடித்து தூக்கிய விரைவு ரெயில்..! வேண்டாமே விபரீதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயில் முன்பு செல்பி எடுக்கும் விபரீத முயற்சியில்  ஈடுபட்ட கானா பாடகர் மைக்கேல்ராஜ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் மைக்கேல் ராஜ் . கூலி வேலை செய்து வந்தாலும் கானா பாடல் பாடுவதில் ஆர்வம் உள்ள மைக்கேல்ராஜ், அவ்வப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து கானா பாடல்களை பாடி, அதில் நடித்து வீடியோவாக உருவாக்கி யூடியூப்களில் பதிவேற்றிவந்தார்.

பெரும்பாலும் தன்னை ரவுடியாகவும், தாதாவாகவும் நினைத்து அட்டை கத்திகளுடன் வீடியோக்களில் பாடியும், ஆடியும் நடித்து வந்தார் கானா மைக்கேல்ராஜ்

துடைப்பம் ஹேர் ஸ்டைலுடன், ஸ்மார்ட் போனும் கையுமாக வலம் வரும் மைக்கேல்ராஜ், ஜோலார்பேட்டை காட்பாடி ரயில்வே மார்க்கத்தில் மேல் ஆலத்தூர் ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று ரெயில் தன்னை நெருங்கும் போது விலகுவது போல செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ரெயில் முன்பாக நின்று மைகேல் கெத்தாக செல்பி எடுக்க முயன்றுள்ளார். அவர் தனது செல்போன் கேமரா பட்டனை தட்டுவதற்குள், அந்த அதிவேக ரெயில் மைக்கேலை தட்டி தூக்கி வீசி எறிந்தது. இதில் கானா மைக்கேல் சம்பவ இடத்திலேயே எலும்புகள் நொறுங்கி பரிதாபமாக பலியானார். அவரது சடலத்தை பார்த்து நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்மையில் செங்கல்பட்டு அருகே ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற 3 பேர் அடிபட்டு பலியான நிலையில் அதே போல மற்றொரு விபரீத சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. குடும்பத்தினரின் எதிர்காலம் கருதியாவது, இளைஞர்கள் இது போன்ற விபரீத செல்பி முயற்சிகளை கைவிட வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments